Home கட்டுரைகள் தியாகச் சுடர் பிபின் சந்திரபால்

தியாகச் சுடர் பிபின் சந்திரபால்

47 second read
0

இரு குழல் துப்பாக்கிகளையோ, இருமுனைக்கத்தியையோ நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். யாராவது மூன்று குழல் துப்பாக்கி என்றோ, மும்முனைக் கத்தி என்பதையோ கண்டதுண்டா? கேட்டதுண்டா? அப்படிப்பட்ட துப்பாக்கி அல்லது கத்தியின் ஒரு குழல் அல்லது முனை தான் இன்று நாம் சந்திக்கவிருக்கும் பெருந்தகை. Bal-Pal-Lal என்ற கடந்த நூற்றாண்டுத் துவக்கத்தில் சுதந்திரப் போராட்டக் களத்தைக் கலக்கிய தீரர்கள் மூவரைத் தாம் நாம் அவ்வாறு அழைக்கிறோம். பால கங்காதர திலகர் என்ற Balம், பிபின் சந்திர பாலர் என்ற Palம், லாலா லஜபதி ராய் என்கிற Lalம் தான் அந்த முக்குழல் துப்பாக்கிகள். இந்த மூவேந்தர்களில் இன்று நாம் சந்திக்கவிருப்பது…………….. பிபின் சந்திர பால் (Bipin Chandra Pal.)

பிபின் சந்திர பால் தற்போது வங்காள தேசத்தில் இருக்கும் சில்ஹெட் மாவட்டத்தின் போய்ல் என்ற கிராமத்தில் 1858ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி பிறந்தார். செல்வச் செழிப்பான வைணவக் குடும்பத்தில் பிறந்த பிபின் சந்திரரின் தந்தையார் ராமச்சந்திர பால் பாரசீக மொழியில் விற்பன்னர், சிறிய அளவு நிலங்களின் சொந்தக்காரர். இந்தியாவில் நிலவிய புரட்சிகரமான சிந்தனைகளின் தந்தையாக கருதப்பட்டவர் பிபின் சந்திர பாலர். அவர் எந்த அளவுக்கு மிகப் பெரிய சீர்திருத்தவாதியாக இருந்தார் என்றால் அவர் ஒரு விதவையைத் திருமணம் செய்து கொண்டதால் தனது குடும்பத்தோடு கொண்டிருந்த பந்தங்களையே அறுக்க வேண்டி வந்தது. கோல்காத்தாவின் மாநிலக்கல்லூரியில் இணைந்த பிபின் சந்திரபால் தனது படிப்பைத் தொடர முடியாத காரணத்தால், அவர் தலைமை ஆசிரியராக தனது பணியைத் தொடக்கினார். பின்னாட்களில் அவர் கோல்காத்தா பொது நூலகத்தில் நூலகராக பணி செய்த போது ஷிவ்நாத் ஷாஸ்த்திரி, SN பேனர்ஜி, BK கோஸ்வாமி போன்ற தேசபக்தர்களை சந்திக்க நேர்ந்தது. தேச பக்தி அவரை ஆட்கொண்ட காரணத்தால், தனது வேலையையே கூட உதறித் தள்ளி அரசியலை தனது முழு நேரப் பணியாக மேற்கொண்டார்.

1898ம் ஆண்டு comparitive ideology என்ற துறையில் படிக்க இங்கிலாந்துப் பயணமும் மேற்கொண்டார். ஆனால் ஒரே ஆண்டுக்காலத்தில் அவர் இந்தியா திரும்பி, பிறகு இந்தியர்களிடம் சுயராஜ்யக் கருத்துக்களைப் பரப்ப ஆரம்பித்தார். சமூக விழிப்புணர்வு மற்றும் தேசியத்தை மக்கள் மனங்களில் முடுக்கி விட அவர் நிறைய கட்டுரைகளை எழுதினார். பன்முகத் திறமை படைத்த பிபின் சந்திர பாலர் பத்திரிக்கையாளர் என்ற தனது ஒரு முகம் வாயிலாக, தேசபக்திக் கனலை மக்கள் இதயங்களில் மூட்டி விட்டார். பல இதழ்கள், வாராந்திரப் பத்திரிக்கைகள், புத்தகங்கள் ஆகியவற்றை எழுதி, சுயராஜ்ஜியக் கருத்துக்களைப் பரப்புவதில் முனைந்தார். அவரது முக்கியமான புத்தகங்களாக, Nationality and Empire, Indian Nationalism, Swaraj and the Present Situation, The Soul of India, The Basis of Social Reform, The Hinduism and The New Spirit போன்றவை அடங்கும்.

Democrat பத்திரிக்கை தவிர வேறு பல பத்திரிக்கைகளின் ஆசிரியராக அவர் இருந்திருக்கிறார். தவிர அவர் paridarshak, New India, Bande Mataram, Swaraj போன்ற பத்திரிக்கைகளை ஆரம்பிக்கவும் செய்தார். கோல்கத்தாவிலிருந்து வெளி வந்த Bengal Public Opinionன் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார், 1887-88ல் லாஹோரிலிருந்து வெளிவந்த The Tribune பத்திரிக்கையின் ஆசிரியராகவும், 1901ல் ஆங்கில வார இதழான Indiaவின் நிறுவனர் ஆசிரியராகவும், 1906ம் ஆண்டு Bande Mataram ஆங்கில தினசரியின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார். இந்த நாளிதழ் தான் பின்னர் அரசால் தடை செய்யப்பட்டது. அவர் Modern Review, Amrit Bazaar Patrika, The Statesman போன்ற பத்திரிக்கைகளுக்கு வாடிக்கையாக கட்டுரைகள் வரைந்து தந்தார். ஸ்வாமி அரோபிந்தோ அவர்களால் ‘தேசியத்தின் மகத்தான இறைதூதர்’ என்றே அழைக்கப்பட்டார் பிபின் சந்திர பாலர்.

நமது கட்டுரை நாயகர் பிபின் சந்திர பாலர் தான் Lal-Bal-Pal என்ற 3 புரட்சிகரமான மும்மூர்த்தியர்களில் ஒருவர் என்பதை நாம் முன்பே பார்த்திருந்தோம். இந்த மூவர் தாம் குள்ளநரி ஆங்கிலேயர்கள் 1905ம் ஆண்டு வங்காளத்தைப் பிளந்த போது, நாடு முழுக்க நிகழ்ந்த கிளர்ச்சிக்கும் கொந்தளிப்புக்கும் காரண வித்துக்கள். இது நடந்தது எல்லாம் சுதந்திரப் போராட்டத்தில் மோஹந்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அரசியல் களத்தில் தோன்றும் முன்பாக நடந்தது. இந்தக் கிளர்ச்சியை ஒட்டி, பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டு, அரசு அடக்குமுறையை 1907ம் ஆண்டு கட்டவிழ்த்து விட்டது. பிபின் சந்திர பாலர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்; அங்கே குறிப்பிட்ட காலத்துக்கு அவர் புரட்சிகரமான India Houseடு தொடர்பு கொண்டிருந்தார், ஸ்வராஜ் பத்திரிக்கையை நிறுவினார். ஆனால் அரசியல் தாக்கங்கள் காரணமாகவும், 1909ம் ஆண்டு நிகழ்ந்த Curzon Wyllieன் படுகொலை காரணமாகவும் இந்த பத்திரிக்கை நிறுத்தப்பட்டு, லண்டனில் பிபின் சந்திர பாலர் கொடும் ஏழ்மைக்கு தள்ளப்பட்டு, லண்டனில் மனநிலை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர் அவர் தனது தீவிரமான போக்கை சற்றுக் கைவிட்டு, சுதந்திர நாடுகளின் கூட்டு என்ற மகத்தான எண்ணத்தை முன்னிறுத்தினார். காந்திய மரபு என்ற ஒன்றை முன்னிறுத்தியமைக்காகவும், தற்போதைய அரசின் இடத்தில் எந்த அரசுமே இல்லாத வகையிலும், அல்லது காந்தியின் யதேச்சாதிகார போக்கை கண்டிக்கும் வகையிலும் காந்தியடிகளை முதன் முதலாக விமர்சித்தவர் பிபின் சந்திர பாலர் தாம்.

நமது மும்மூர்த்திகள் தாம் மான்செஸ்டரின் நூற்பாலைகளில் தயாரிக்கப்பட்ட மேற்கத்திய ஆடைகளை எரிப்பது என்ற புரட்சிகரமான சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்தவர்கள். மேலும் சுதேசியின் வெளிப்பாடாக, ஆங்கிலேயர்கள் தயாரித்த பொருட்களைப் புறக்கணித்து, அவர்களின் வியாபாரங்கள், தொழில்கள் ஆகியவற்றுக்கு எதிராக பணிநிறுத்தங்களில் ஈடுபடுவதன் மூலமாக ப்ரிட்டிஷாருக்கு புரியும் வகையில் பாடம் புகட்ட முடியும் என்று கருதினார்கள். வந்தே மாதரம் வழக்கில் ஸ்வாமி அரோபிந்தோவுக்கு எதிராக சாட்சியம் கூற மறுத்ததால், பிபின் சந்திர பாலர் 6 மாத கால சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. இவரது தாக்கம் நாடு முழுக்க எந்த அளவுக்கு இருந்தது என்றால், பாரதத்தின் தென் கோடியில் இருந்த திருநெல்வேலி ஜில்லா வரை அவர் கருத்துக்களை வேத வாக்குகளாக கருதி செயல்படத் துடித்த புரட்சியாளர்கள் பலர் இருந்தார்கள். இவர் விடுதலையைக் கொண்டாடும் வகையில் இராமநாதபுரத்தில் சுப்பிரமணிய சிவாவும், வ.உ.சியும் பெரும் உணர்ச்சிப் பெருக்கான கூட்டத்துக்கே ஏற்பாடு செய்திருந்தார்கள். பிபின் சந்திர பாலர் பின்னர் சுப்பிரமணிய சிவா ஏற்படுத்தவிருந்த பாரத மாதா கோயிலுக்கும் உறுதுணையாக இருந்தார். 1904ம் ஆண்டு பம்பாயில் நிகழ்ந்த இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம், 1905ம் ஆண்டு வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டம், சுதேசி இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், 1923ம் ஆண்டு ஏற்பட்ட வங்காள ஒப்பந்தம் ஆகியவற்றில் பெரும்பங்கு ஆற்றினார். அவர் 1896ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். பாரபட்சமானதாக இருந்ததால், ஆயுதச் சட்டத்தை வாபஸ் பெற 1887ம் ஆண்டு தீவிரமாக தன் வாதங்களை முன்வைத்தார். நாட்டில் சமுதாயக் கேடுகளை களைய வேண்டும் என்பதிலும், தேசிய உணர்வுகளை மக்கள் மனங்களில் தூண்டி விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.

தீவிரமும் உறுதியும் நிறைந்த பேச்சாளரான பிபின் சந்திர பாலர் 1905-07ம் ஆண்டுகளில் நிகழ்ந்த சுதேசி இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனங்களில் பாதிப்பை ஏற்படுத்தினார். இந்தியாவின் முழுமையான சுதந்திரம் தனது இலக்கு என்று காங்கிரஸ் ஏற்படுத்திக் கொள்ளும் முன்பாகவே, அவர் அதை தொடர்ந்து பரப்பி வந்தார். மையத்தில் அதிகாரங்கள் குவிந்திருக்கும் ஆட்சியை அவர் விரும்பவில்லை; மாறாக கூட்டாட்சித் தத்துவம் அமைந்த இந்திய குடியரசு அமைய வேண்டும் என்பதே அவரது இலட்சியமாக இருந்தது, இதில் இருக்கும் மாகாணங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரியான தன்னாட்சி அமைந்திருக்கும். அவரது தேசபக்தி, சுதந்திரம் பற்றிய கருத்தில், தனிப்பட்ட மற்றும் தேசிய சுதந்திரம் ஆகியன கலந்திருந்தன. வாய்மை மற்றும் சுதந்திரத்தின் பூஜகரான பிபின் சந்திரர், பாசாங்கு செய்பவரோ, கபட நாட்தாரியோ அல்ல. முனைப்பு நிறைந்த அரசியல், சமுதாய, தத்துவ மற்றும் சமய சிந்தனையாளரான அவரிடம் இலக்கியத் துறையில் ஒரு தனிப்பாணி இருந்தது. அவரது புத்தகமான The New Economic Menace of Indiaவில் அவர் இந்திய தொழிலாளர்களுக்காக கூடுதல் ஊதியமும், குறைவான பணி நேரத்தையும் கோரினார். ஏழைகளுக்காக அவர் கொண்டிருந்த அக்கறை தான் ஆஸாமின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியில் போராடத் தூண்டியது. ப்ரிட்டிஷார் இந்தியாவை பொருளாதார ரீதியாக கொள்ளையடிப்பதற்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்து எச்சரிக்கை செய்த வைகறைச் சேவல் பிபின் சந்திர பாலர்.

கிலாஃபத் இயக்கத்துக்கு எதிராகவும், காந்தியடிகளின் யதேச்சாதிகாரப் போக்குக்கு எதிராகவும் கடுமையாக குரல் கொடுத்த பிபின் சந்திர பாலர் 1922ம் ஆண்டு தொடங்கி தன் வாழ்வின் பின்னாட்களில் பிபின் சந்திர பாலர் தன்னை காங்கிரஸின் அனைத்து வேலைகளிலிருந்தும் ஒதுக்கிக் கொண்டு, தனிமையும், கொடும் ஏழ்மையும் நிறைந்த வாழ்கையைக் கழித்தார். அவர் மே மாதம் 1932ம் ஆண்டு 20ம் தேதி இந்த உலக வாழ்வைத் துறந்தார். நாட்டு சுதந்திர வேள்வியில் தங்கள் உடல் பொருள் ஆவியை மனமுவந்து அளித்த எண்ணிறந்தோர் உண்டு. அவர்களில் எத்தனை பேர்கள் பற்றிய தகவல்கள் கூட நம்மிடம் கோர்வையாக இல்லாமல் இருப்பது, நாடும், நாமும் அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலியா? நன்றியா? எத்தனையோ பேர்கள், அவர்களின் எத்தனையோ தலைவர்கள் – ஆனால் இன்று உதட்டளவில் காந்தியும், உரையளவில் நேருவும் மட்டுமே தான் நம் கண்களுக்குத் தெரிகிறார்கள். ஆடிக் காற்றில் அம்மியும் பறந்து போகும் என்ற வகையில், யதேச்சாதிகாரமும், பதவிப் பித்தும் தலை தூக்கி, நேர்மையையும், தியாகத்தையும் மறைத்து விட்டன. ஏட்டளவிலே, எங்கோ ஒரு மூலையிலே தங்கி விட்ட, இந்த மங்கிப் போன சுடர்கள், தூசு படிந்த இந்த மாணிக்கங்கள் தூண்டப்பட்டு, தூசு தட்டப்பட்டு, ஆதவன் ஒளியில் பிரகாசிக்க வேண்டும். இதற்கு பரந்த நோக்கும், சீரிய சிந்தனையும், நேரிய நெஞ்சும் எல்லாவற்றுக்கும் மேலாக நன்றியறிதலும், நாட்டுப் பற்றும் மிகத் தேவை. இந்த இரண்டு கண்களும் நமக்கு வாய்க்கப் பெற்றால், நாடு தான் பிரதானமாக இருக்கும், நாட்டின் விசுவாசிகள் பூஜைக்குரியவர்களாக திகழ்வார்கள். வந்தே மாதரம்!!

Load More Related Articles

Check Also

ஸ்ரீ அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை

உங்களுடைய சபையின் ஆண்டுவிழாவில் பேசும்படி என்னைக் கேட்டுக்கொண்டப்பொழுது இன்றையப் பேச்சுப் …